பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது.
அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு முதலிடம் தருகிறோம். அதோடு தெய்வங்களிலும் பெண் தெய்வங்களை தான் பலரும் வணங்குகிறோம். பொதுவாக பெற்றெடுத்த தாயை, அம்மா என்று தான் அழைப்போம். பிறரிடம் கூறும்போது தான் எனது தாய் என்று கூறுவோம். அப்போதும் பெரும்பாலும் அம்மா என்றே குறிப்பிடுவோம். தாய் எனும் உறவுமுறை சொல்லால், பெற்றெடுத்த தாயை அழைப்பதில்லை. ஆனால், தாயை தவிர பிற பெண்களை, தாய் என்று அழைக்கும் வழக்கம் நமது பண்பாட்டில் இருக்கின்றது.
தங்கையை உடன் பிறந்த அண்ணன், தாய் என்றும் அழைப்பதை கிராமங்களில் நாம் கேட்கலாம். தாயை போன்று தன் மீது அக்கறை கொண்டவள் என்பதால், தங்கையை அவ்வாறு அழைப்பார்கள். மேலும் உடன் பிறந்த தங்கை மட்டுமின்றி, தன்னை விட வயது குறைந்த பிற பெண்களையும் தங்கை என்று குறிப்பிடுவோம். அதை கிராமங்களில் தங்கச்சி என்றும், தாய் என்றும் அழைப்பதை கேட்கலாம். நண்பரை பார்க்க வீட்டுக்கு சென்றால் கூட, நண்பரின் தங்கையை பெயரை சொல்லி அழைப்பது இல்லை. அது சிறுமிகளாக இருந்தாலும் தாயி, அண்ணன் இருக்கிறாரா? என்று தான் கேட்பார்கள். அதிலும் சிலர் நண்பரின் தங்கையாக இருந்தாலும் அந்த பெண்ணின் பெயரை கூட கேட்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை. ஒரே வார்த்தை, தாய் என்று குறிப்பிட்டு பேசி விடுவார்கள். ஈன்ற தாயை கூட தாய் என்று அழைக்காத நிலையில், பிற பெண்களை ஏன்? தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு எழலாம். வயது குறைந்த பெண்களாக இருந்தாலும் தாய் என்று அழைக்கும் போதே மனம் கள்ளம், கபடம் எதுவுமின்றி தெளிவான நிலைக்கு வந்து விடும். அந்த வார்த்தைக்கு அத்தனை மந்திர சக்தி உண்டு. அதன் மூலம் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதேநேரம் ஆண்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைக்கிறது. அதனால் தாயை தவிர, பிற பெண்களை தாய் என்று அழைக்கும் வழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளனர். இதுதவிர வயதில் மூத்த பெண்களை அக்கா, சித்தி, அத்தை என தகுந்த உறவுமுறைகளை வைத்து அழைப்பார்கள். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை, ‘அண்ணே’ என்ற உறவுமுறையுடன் தான் அழைப்பார்கள். அதில் சமவயது ஆணாக இருந்தாலும் சரி, ஒன்றிரண்டு வயது குறைந்த ஆணாக இருந்தாலும் அண்ணே என்று அழைக்க பெண்கள் தயங்குவது இல்லை. இதனால் ஆண்களும், பிற பெண்களை தாய் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆயுதங்களோடு கூடவே செல்வது அல்ல. அற்புதமான உறவு முறையை குறிக்கும் வார்த்தையை கூறி அழைப்பது தான் முதல் பாதுகாப்பு என்று முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளனர். இது இன்றும் கிராமங்களில் நாடித்துடிப்போடு இருந்து கொண்டி ருக்கிறது. அது நாகரிக வேகத்தில் சின்னா பின்னமாகி விடாமல் காப்பது நமது கடமை. அடுத்த தலைமுறையிடம் அந்த பண்பாட்டை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியம். இதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ஆண் குழந்தைகளிடம், பெண் குழந்தைகளை எப்படி அழைக்க வேண்டும், அதற்கு எந்த வார்த்தைகளை பயன் படுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். அதன்மூலம் பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.