11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 10 நவம்பர், 2021

சென்னையின் அழிக்கப்பட்ட ஏரிகள்

1909 ம் ஆண்டு மெட்ராஸின் வரைபடத்தையும், 1970ம் ஆண்டு 'சர்வே ஆஃப் இந்தியா' வரைபடம் மற்றும் சமகால கூகுள் வரைபடம் ஆகியவற்றின் ஒப்பீடுகளை வைத்து பாரக்கும்போது சென்னையின் ஏரிகள் அழிக்கப்பட்டது தெளிவாகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்துவரும் கனமழை 2015ம் ஆண்டு நினைவுகளை நோக்கி நம்மை இழுத்து செல்கிறது. மீண்டும் அப்படியொரு சூழல் உருவாகிவிடக்கூடாது என்றாலும், அதிலிருந்து பாடங்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீர் காட்சிகள் உணர்த்துகின்றன. 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் 300 பேர் இறந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10,000-க்கும் மேற்பட்டோர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் உள்ள 114 நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சென்னையில் ஆறுகளை தூர்வாரி பருவமழைக்கு தயாரானாலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஆண்டுதோறும் தண்ணீர் தேங்கியிருப்பது வாடிக்கையாக உள்ளது. அதற்கான காரணம் எளிமையானது. அந்த தாழ்வான பகுதிகள் யாவும் ஒரு காலத்தில் ஏரிகளாக இருந்தவைதான். இன்று கட்டிடங்களாக முளைத்து நின்கின்றன. இந்த மாற்றங்களை சென்னையின் கடந்தகால வரைபடங்கள் மூலம் நம்மால் உணர முடியும். 1909ம் ஆண்டு மெட்ராஸின் வரைபடத்தையும், 1970ம் ஆண்டு 'சர்வே ஆஃப் இந்தியா' வரைபடம் மற்றும் சமகால கூகுள் வரைபடம் ஆகியவற்றின் ஒப்பீடுகள், ஏரிகள் எப்படி காணாமல் போனது என்பதை தெளிவாக விளக்குகின்றன.

லாங் டேங்க் ஏரி (The Long Tank)

'லாங் டேங்க் ஏரி' சென்னையில் தான் இருந்ததா? என கேள்வி எழலாம். அதில் தவறேதும் இல்லை. காரணம் அதற்கான தடயமே இன்று இல்லை. மைலாப்பூரின் நீண்ட ஏரியான இது (long tank) நுங்கம்பாக்கம் வரை பரந்துவிரிந்திருந்தது. 1920களின்_முற்பகுதியில் தியாகராயநகர் ( T.Nagar ) பகுதியை உருவாக்குவதற்காக ஏரி அழிக்கப்பட்டது. இந்த ஏரியின் மீது கட்டிடங்கள் இன்று அணிவகுத்து நிற்கின்றன.

வியாசர்பாடி ஏரி (Vyasarpadi Tank)

வட சென்னையில் இருந்த வியாசர்பாடி ஏரி தான் இன்று 'டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி'யாக மாறியிருக்கிறது. அதன் மீதி பகுதி பிவி காலனி, சாலிமன் காலனியாகவும் ஏழை மக்களின் வாழ்விடங்களாக இருக்கிறது. இந்த ஏரியின் தடம் 1971ம் ஆண்டு வரைபடத்தில் காணப்படுகிறது. ஆனால், இன்றைய கூகுள் மேப்பை எடுத்து பார்க்கும்போது 'வியாசர் பாடி' ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரிகள் ( Velachery Lake and Adambakkam Lake)

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழைநீரில் மூழ்கின. ஒவ்வொரு பருவமழையின்போதும், வேளச்சேரி தண்ணீரில் மிதப்பதையும், போக்குவரத்து நெரிசலால் அப்பகுதிவாசிகள் தவிப்பதையும் நம்மால் காணமுடிகிறது. 1970ம் ஆண்டு 'சர்வே ஆஃப் இந்தியா' வரைபடத்தில் உள்ள வேளச்சேரி ஏரியின் ஒரு துண்டு மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறது. ஆதம்பாக்கம் ஏரியை பொறுத்தவரை தற்போது தடையமே இல்லை.

காட்டேரி ஏரி (Katteri Lake)

1970ம் ஆண்டு சென்னை வரைபடத்தில் காட்டேரி என்ற ஏரி இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. அடையாறு ஆற்றின் கீழே வளைந்து செல்லும் ஆறாக இருந்த காட்டேரி இன்று, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் தரமணி பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகமாக மாறியிருக்கிறது.

கொடுங்கையூர் ஏரி (Kodungaiyur Lake)

வட சென்னையிலிருந்த கொடுங்கையூர் ஏரி இன்று இல்லை. மாறாக, முத்தமிழ் நகர் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளாக தாங்கி நிற்கின்றன.

கொன்னூர் ஏரி (Konnur Tank)

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், கொன்னூர் ஏரி மீது உருவாக்கப்பட்ட சிட்கோ நகரில் உள்ள பல வீடுகளின் தரை தளங்கள் நீரில் மூழ்கின. அந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது மேற்கு சென்னையின் வில்லிவாக்கத்தில் உள்ள இந்தப் பகுதியில் அதிக அளவு நீர் தேங்கியிருந்தது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் அடிக்கடி வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.