11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 11 நவம்பர், 2021

யாழ்பாணம் கடல் நீரை உள்வாங்குகின்றது.

யாழ்ப்பாணத்து மக்கள் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கின்ற கிணறுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவை உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. அதே போல யாழ்ப்பாணத்தில் சுண்ணாம்புத் தட்டுகள் கரைய தொடங்கி அவை கடலுக்குள் செல்வதனால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில் யாழ் குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்

இந்த சூழ்நிலையில் நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் அவசரமாக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கிறது .

1. நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன், கிணறு கீரிமலைக் கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகியவை தொடரபாக பரந்துபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இவ் நீர் தேக்கங்கள் மூலம் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்

2. நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். இதன் மூலம் கடல் நீர் நன்னீரில் கலப்பதை தடுக்க முடியும்

3. மழை நீர் சேமிப்பு திட்டங்கள் ஏற்படுத்த பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் காணப்படும் 1050 குளங்கள் ஆழமாக்கப்பட்டு முழுமையான புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும்

3. நிலக்கீழ் நீரைக் கடலில் கலக்கின்ற குகை வழிகளை இனங்காணப்பட்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட்டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதற்கு கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும் நீர் ஒரு உதாரணமாக இருக்கிறது . ஆகேவ தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் அவசியம் தடுக்க வேண்டும்.

4. ஆனையிறவு மேற்குக் கடல் நீரேரி, ஆனையிறவு கிழக்குக் கடல் நீரேரி, உப்பாறு, தொண்டைமானாறு கடல் நீரேரி போன்ற கடல் நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயல்திட்டங்களை முன்வைப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிக்க முடியும் . அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக யாழ் நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.

5. உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

6. வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

7. யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறும் மாவட்டமாக இருக்கிறது. இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும்

8. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது . இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். ஆகவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

9. நிலாவரைக்கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள் . ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் .

10. யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.