11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஜெனிவாவில் 2022 ஆண்டுக்கான இலங்கை தமிழருக்கான தீர்வு என்ன?

சிறிலங்காவின் உயிா்நாடி   இந்தியாவின் கையில் இருப்பதால் இந்தியாவின் ஆதரவுடன்  மேற்கத்திய நாடுகள் தங்களின்  விருப்பத்திற்கிணங்க தங்களின நலன் சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  பிரேரணைகளை கொண்டு வருவாா்கள்.

12-09-2022 திகதியன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு கூட்டத் தொடரில்  முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலின் முதல் நாள் அமர்வில் இலங்கை தொடர்பாக இரண்டு தடவைகள் உரையாற்றிய பதில் மனித உரிமை ஆணையாளர் நடா அல் - நஷிப் இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்ததுடன், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனவும் , மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு தேவையான உரையாடலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியமென தெரிவித்துள்ள அவர், இலங்கையில் போர்க்குற்றங்கள் உட்பட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், இலங்கையின் நிலைமை இன்னமும் மிகவும் பலவீனமாக இருப்பதால் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஆணையாளரின் அறிக்கையிடலை அடுத்து அதன் மீதான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ஜெனிவாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை மக்களின் இறையாண்மையை மீறுவதால் அதனை தமது நாடு நிராகரிப்பதாகவும், அதேபோல மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வெளியக விசாரணை பரிந்துரைகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறினார்.

இலங்கை தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றதுடன் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பேணப்படவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

 சிறிலங்கா ஆதரவு நாடுகள் வழமைபோலவே  சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.  

இலங்கையின் நிலைப்பாடு.

இலங்கை தொடர்பான பரஸ்பர உரையாடலின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கையொன்றை சமர்ப்பித்து மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு ஏற்ற புதிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் உரையாற்றியுள்ளார்.


இந்தியாவின் நிலைப்பாடு.

 இந்திய பிரதிநிதி   இலங்கையின்  அரசியலமைப்பின்13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும், அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

பிரித்தானியாவின் நிலைப்பாடு.

 இலங்கையில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறைகள் நடைபெறாதமை காரணமாக இலங்கையில் சாட்சியங்களை சேகரிக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி தொடர வேண்டும், 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலைகொண்டு உள்ளது என்றும்பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கைகள் கவலை தருவதாக  பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ்சின் நிலைப்பாடு.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் முழுமையான ஒத்துழைப்பை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தனது நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்  என்று பிரான்ஸ் வலியுறுத்தல் விடுத்துள்ளது.

கனடாவின் நிலைப்பாடு.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியானது  மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தின் நிலைப்பாடு.

இலங்கை  நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு.

இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

சீனாவின் நிலைப்பாடு.

 சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu   கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும்,   நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாகவும், சமுக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின்  நிலைப்பாடு.

 இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு உள்ளதை தாம் வரவேற்பதாகவும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நிலைப்பாடு.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டிய அமொிக்கா நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு.

“ சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமை சபை இதுவரை தீர்க்கமான அணுகுமுறையில் செயற்படவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம். சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். சிறிலங்கா தொடர்பில் ஐ.நா  30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் இது தொடர்பில் கவனம் கொள்ளப்படபோரின் போது படுகொலை செய்யப்பட்டமைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் நீதி தேடும் தமிழர்கள் இன்றுவரை விரக்தியடையவில்லை.  கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்களை தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகள் அபகரித்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது. தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=zitwTLcGTNI&ab_channel=TGTEMedia

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுவதோடு தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் வி.பி.லிங்கஜோதி குறிப்பிட்டு அறிக்கை தாக்கள் செய்து பேசினாா்.


பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் சுதாவின் நிலைப்பாடு.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான கெடுபிடிகள் குறிப்பாக முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் போன்ற விடயங்களும் நில அபகரிப்பு போன்ற விடயங்களையும் அதிலே கோடிட்டு காட்டியிருக்கின்றார்.                  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட  இந்த அறிக்கையானது  மிகவும் காத்திரமானது என்ற வகையிலேயே நாம் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டாா். 

தொகுப்பு, தமிழா் சுடா் செய்தி சேவை, அருளகம்.


https://www.youtube.com/watch?v=Ax27GIGWdNA&t=127s&ab_channel=IBCTamilTV


https://www.youtube.com/watch?v=gfdzac_G4yc&ab_channel=LankasriNews

மனித உரிமை கவுண்சிலா? சிறிலங்காவா? யார் குற்றவாளி ?

https://www.youtube.com/watch?v=SpFkjD8tCY8&ab_channel=TubeTamil


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.