11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

திருப்தியாய் ஒரு கல்யாண போஜனம் செய்ய வாருங்கள்!

மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள்?

 போஜனம் செய்ய வாருங்கள்

மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்

போஜனம் செய்ய வாருங்கள்

நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்

போஜனம் செய்ய வாருங்கள்

வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து

மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்

நாட்டிய கூடம் பச்ச மரகதம்

பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்

பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்

நட்ட நடுவே குத்து விளக்கேற்றி

தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்

சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய

பந்திபந்தியாய் பாயை விரித்து

உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்

தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி

போஜனம் செய்ய வாருங்கள்

மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்

யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்

அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ

அந்தணர்களும் முன்பந்தியிலே

அணிஅணியாக அவரவர் இடத்தில்

அழகாய் இருந்தார்

அகல்யை திரௌபதி சீதை தாரை

மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி

கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே

முத்திரை மோதிரம் விரலில் கொண்டு

பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து

பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்

போஜனம் செய்ய வாருங்கள்

மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி

இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி

விதம்விதமாகவே வற்றல் அப்பளம்

பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு

சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்

பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்

வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்

குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென

மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்

போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்

வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்

வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்

மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்

பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்

வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்

குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்

சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்

சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்

அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்

என்னென்ன சுண்டல் வகையான வடை

சுமசாலா வடை வெங்காய வடை

சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை

தயிர் வடையும் பால் போளிகளும்

அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்

சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு

முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு

ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு

பேஷா இருக்கும் பேசரி லாடு

குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு

பளபளவெனருக்கும் பயத்தமா லாடு

மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து

போஜனம் செய்ய வாருங்கள்

பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்

தேன்கதளி பழம் செவ்வாழை பழம்

நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்

பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்

ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து

பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்

ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்

வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்

பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி

கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்

மிளகாய் பச்சடி

பந்தியில் பரிமாறினார்

மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்

பார்த்துப் பரிமாறினார்…

https://www.youtube.com/watch?v=lvdQ15M440w&ab_channel=EmusicAbirami



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.