11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

வட்டுக்கோட்டை தீர்மானம் - 14.5.1976.

 


இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு ("தனி ஈழம்'') வேண்டும் என்று, தந்தை என அழைக்கப்பட்ட செல்வநாயகம் தலைமையில், வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் 1976 மே 14-ந்தேதி இந்த மாநாடு நடந்தது. செல்வநாயகத்தின் பிரதம சீடரான அமிர்தலிங்கம் பிறந்த ஊர் பண்ணாகம். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில், வட்டுக்கோட்டை மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

"வட்டுக்கோட்டை பிரகடனம்'' என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் தனி நாடு தீர்மானத்தை செல்வநாயகம் முன்மொழிந்தார். மு.சிவசிதம்பரம் வழிமொழிந்தார். அந்தத் தீர்மான வாசகம் வருமாறு:- "ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.'' இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழம் வாழ்க'' என கூவி இரத்த திலகம் இட்டனர்.

இந்த தீர்மானத்தை அடுத்து, "தமிழர் கூட்டணி''யின் பெயரை "தமிழர் விடுதலை கூட்டணி'' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அமிர்தலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் விளக்கி சொற்பொழிவாற்றினார்.

பின்னர் அவர் கூறியதாவது:- "இலங்கைக்கு இங்கிலாந்து சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களுக்கு தனி நாடு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. "சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்களை நிறைவேற்றக் கூடாது'' என்று கூறி, முழு நாட்டையும் சிங்களரிடமே ஒப்படைத்து விட்டனர். சிங்களர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கிவிட்டனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட, எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. எனவே, இழந்துவிட்ட அரசுரிமையைப் பெற தமிழ் ஈழம் ஒன்றுதான் வழி என்று, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்.'' இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார். அவருடைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. மாநாடு முடிந்ததும், அமிர்தலிங்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

"ஒவ்வொரு வாக்கும் தமிழீழம் அமைப்பதற்கான ஆணையாகும்,அடுத்த பொதுத்தேர்தல் சுதந்திரம் பெற்ற  தமிழீழத்தில் தான் நடைபெறும்” என, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் செய்த முழக்கம் அது தான்.மிகப் பெரும் வெற்றி பெற்றனர்.அதே வேளை , “நான் பிரபல இலங்கையின் பிரபல இடதுசாரி என்.எம்.பெரேராவின் மாணவன். சோசலிசத்தை விரும்புபவன். சோசலிச தமிழ் ஈழம் என்றே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கின்றோம்” என்று பேசுவார் அமிர். அன்று பாயத்தொடங்கிய இரத்தம் - துரோகி, எதிரி,இராணுவம்,போலிஸ், உளவாளி, மாற்று இயக்கம்,உட்படுகொலை, சுட்டவன், ,சுட்டவனைச் சுட்டவன் என தொடர்ந்தது 33 ஆண்டுகள் தொடர்ந்தது.

1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 

மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தiலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தியாகராசா. மாறுபட்ட கொள்கைகளைப் கொண்டிருந்தது போதும் நேர்மையான மக்கள் சேவகன்.தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில்; போட்டியிட்டு வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றவர்.1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்திருந்தார். வரை PLOTE என்ற அமைப்பினர் பிரசாரக் கூட்டத்தின் போது சுட்டுக் கொன்றனர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க , சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. 

1980 களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். “வேகம் போதாது. தமிழ் ஈழத்தை கூட்டணி பெற்றுத் தராது. பாராளுமன்ற வாதிகளால் போராட்டம் நடத்தமுடியாது” என்றெல்லாம் பிரச்சாரம்  செய்தனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் .

1971 இல் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ்  மாணவர்களையும் தமிழ் மாணவர் பேரவையையும் தமது தலைமையின் கீழ் கொண்டு வந்தவர்கள் கூட்டணியினர். 1980 களில் கொலைக் குழுவாக மாறியது விடுதலைக் போராட்டம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.