இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன கோவணம் கட்டிக்கொண்டு 1978 ல் பொலநறுவையில் ஏர் கொண்டு உழுது பத்திரிகை விளம்பரம் செய்தார்.
கோவணம் கட்டி எளிமையாக காட்சியளித்து விவசாயிகளுடன் தான் நெருக்கமானவன் என காட்டினார். அதனை அன்றைய கால சிங்களப் பத்திரிகைகள், வானொலிகள் என அனைத்து ஊடகங்களும் அவரை விவசாயிகளை மீட்க வந்த மீட்பானாகவும், கடவுளாகவும், கதாநாயகனாகவும் சித்தரித்தன என்று கட்டுரையாசிரியர் தி.திபாகரன் (T. Thibakaran) தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆனால் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக பெரிய இரத்த ஆற்றை அவர் ஓடவிடப்போகிறார் என்றோ, இந்துமகா சமுத்திர பிராந்தியத்தில் அமைதியையும், ஜனநாயகத்தையும் குலைக்கப் போகிறார் என்றோ யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
அத்தகையவர் 1977ம் ஆண்டு ஜூலை மாதம் பதவிக்கு வந்த அடுத்த மாதமே இனக்கலவரம் ஏற்பட்டு இலங்கையில் இரத்த ஆறு ஓடியது. இந்த அபாயகரமான வரலாற்று பக்கத்திலிருந்து தான் கடந்த வாரம் சுமந்திரன் சாரம் கட்டி ஏர் பிடித்த நாடகத்தினை ஒரு அபாயச் சங்கொலியாகவே பார்க்கப்பட வேண்டும்.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் ஊழவு இயந்திரத்தில் (டக்கரில்) ஓடிவந்த அவர் திடீரென வயலில் மாடுபூட்டி ஏர் பிடித்து உழுது விளம்பரப்படுத்தும் அரசியல் நாடகமாடியது மிக மோசமானது.
இது அறிவியலுக்கும் நடைமுறைக்கும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய அரசியல் ஒரு நூற்றாண்டுக்கு முந்திய பிற்போக்குத் தன்மை வாய்ந்தது. தமிழ் மக்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பிந்திய அரசியல் யுகத்தில் வாழ்கிறார்களா?அவ்வாறு தான் இவர்கள் எண்ணுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இன்றைய இலத்திரனியல் உலகில் இது மிக மோசமான அருவருக்கத்தக்க அரசியல் நாடகம். இந்த நாடகத்தின் வரலாற்றை தென்னிந்திய சினிமாவில் தான் பார்க்க முடியும். அந்தப் பின்னணியானது இலங்கைத் தமிழ் அரசியலில் ஜி.ஜி.பொன்னம்பலம் முதல் அமிர்தலிங்கம், சிறிதரன் ,சுமந்திரன் வரை தொடர்வதை வரலாற்றில் பார்க்க முடிகிறது.
இத்தகைய அரசியல் இன்றைய காலத்தில் அரசியலிலும், சமூக அரசியலிலும் இவர்கள் ஒரு நூற்றாண்டு பின் தள்ளி இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. 1970களில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் அரசியலுக்கு அடியாட்களாக பாதாள உலக கோஷ்டியினரே இருந்தனர்.
அரசியலுக்கான இராணுவமாக தொழிற்பட்ட அந்தப் பாதாள உலக கோஷ்டிகளுக்கு பிரேமதாச தான் தலைமை தாங்கினார். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களை சட்டத்துக்கு விரோதமாக கட்டுப்படுத்தவும் அவர்களின் அரசியலுக்கு தடையாக இருப்பவர்களை அழித்து ஒழிக்கவும் இந்தப் பாதாள உலக கோஷ்டி தனியார் இராணுவமாக செயற்பட்டது.
இந்தப் பாதாள உலக கோஷ்டி 1980களின் ஆரம்பத்தில் தனக்கு ஆபத்தாக மாறி வருவதை உணர்ந்த ஜெயவர்த்தன, தனக்கான அங்கீகாரமுடைய அரச இராணுவம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்தார். இதற்காக உருவாக்கியது தான் விசேட அதிரடிப்படை.
இந்த விசேட அதிரடிப்படை என்பது (படித்த உயர் குழாத்து இராணுவம்) இது Elite military என்று அழைக்கப்படுகிறது. இதன் முதலாவது தளபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டார். இந்த விசேட அதிரடிப்படை தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலையை அதிகளவு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடிப்படை கிழக்கு மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான காரணம் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்ந்ததால் அந்த சூழலில் இவர்களுக்கு பெரிய அளவு இழப்பு ஏற்படாது என்பது தான்.
அதேவேளை இந்த அதிரடிப்படை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டிருந்தால் இவர்களில் பெரும் பகுதியினர் கொல்லப்படுவர் என்பதனாலேயே அவர்கள் வடக்கு நோக்கி அனுப்பப்படவில்லை. இதனை அன்றைய காலத்தில் போராளிகளின் கெரில்லாப் போர் உத்தியை கணக்கில் எடுத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
அன்றைய காலத்தில் இலங்கை பொலிஸ் சேவைக்கு இணைப்பதற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஆனால் விசேட அதிரடிப்படைக்கு இணைப்பதற்கு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்திருக்க வேண்டும்.எனவே இத்தகைய விசேட அதிரடிப்படையினர் எப்படிப்பட்டவர்களாக இருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதனாலேயே இவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு இனப்படுகொலைப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மையாகும். இத்தகைய தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டு பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியும் ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் பிரேமதாச தலைமையில் இயங்கிய பாதாள உலக கோஷ்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு முனைந்திருந்தால் பிரேமதாசவின் அடியாட் பலத்தின் பின்னணியில் 1980களில் ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக உடைந்திருக்கும்.
1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் தென் இலங்கையில் ஏற்பட்ட ஜேவிபி கிளர்ச்சியை முறியடிப்பதற்காக கொழும்பில் மையம் கொண்டிருந்த பாதாள உலக கோஷ்டியையும் விசேட அதிரடிப்படையின் ஒரு பகுதியையும் பிரேமதாச பயன்படுத்தி (Green tigers) பச்சைக் புலிகள் என்ற ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்கினார்.
இந்த பச்சைப் புலியை பயன்படுத்தி ஜே .ஆர் .ஜெயவர்த்தனவை அரசியலில் இருந்து ஒதுக்கி பெரும் 'நெருப்பாற்றை' கடந்து இலங்கையின் ஜனாதிபதியாக பிரேமதாஸ முடிசூடிக் கொண்டார். இங்கே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஜேவிபி இயக்கத்தின் சிங்கள இளைஞர் யுவதிகளை கொன்றொழித்து தனக்கு எதிராக சிங்கள உயர்சாதி அரசியல் தலைவர்களை அவர் அடக்கினார் என்பது இன்னொரு பக்கம் உண்மையாகும்.
ஜே.ஆர். ஜெயவர்த்த நாவினால் உருவாக்கப்பட்ட ' தர்மிஸ்ட அரசாங்கம்' தமிழ் மக்களை கொலை செய்த தொகையை விட ஜே.வி. பி இயக்கத்தினர் என்று சிங்கள மக்களை கொன்றொழித்த தொகை அதிகமாகும். 'மன்னன் என்பவன் மக்களுக்கு காட்சி எளிமையானவனாக இருக்க வேண்டும்' என மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இதனைத் தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தேர்ந்தெடுத்து தனது அரசியலுக்காக காட்சிக்கு எளியவனாக கோவணம் கட்டி ஏர் பிடித்து உழுது காட்டி தன்னை விளம்பரப்படுத்தினார். இவ்வாறு மக்களுக்கு எளிமையானவனாகவும், இனியவனாகவும் தன்னை இனம் காட்டினார்.
ஆனால் இத்தகையவர் கத்தியுடனும், துப்பாக்கியுடனும், கழுத்தறுப்பு, காலைவாரி விடல் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினையை மேன்மேலும் ஆழப்படுத்தினார். இன்று இலங்கைத்தீவில் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத அளவுக்கு சிக்கல் வாய்ந்ததாக மாற்றி அமைத்து வரும் இவர்தான்.
இலங்கை அரசியலில் ராஜதந்திரத்தில் சாணக்கியர் என்றும் அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வெற்றி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் அவருடைய வெற்றி என்பது அவருடைய அரசியல் எதிரிகளை பழிவாங்குவதில் வெற்றி பெற்றார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்திய அரசியல்வாதிகளை கையாள்வதில் வெற்றி பெற்றார். உள்நாட்டில் தன் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிவில் உரிமையை பறித்து அவரை அரசியல் அரங்கில் முற்றாக தோற்கடிப்பதில் வெற்றி பெற்றார். தனது கட்சிக்குள் உள்ள தலைவர்களை பழிவாங்குவதிலும் வெற்றி பெற்றார். படுகொலை இராணுவத்தை அமைத்தார்.
இந்திய, அமெரிக்கா, பிரித்தானிய(கினிமினி),தென்னாபிரிக்க,இஸ்ரேலிய(மொசாட்) இராணுவமென அன்னியப் படைகளை அழைத்து பயிற்சி வழங்கி ஆலோசனை பெற்று நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட மூல கர்த்தாவாக இருந்தார். ஆனாலும் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த பிரேமதாசவை பழிவாங்கவோ, வெற்றிகொள்வோ அவரால் முடியவில்லை.
எனவே ஜே. ஆரின் சாதனை என்பது நாட்டில் இரத்த ஆற்றை ஓடவிடுவதற்கான நடிப்பா இருந்ததே தவிர இலங்கைத் தீவில் அமைதி, சமாதானம், சகவாழ்வு ,ஒற்றுமை, ஜனநாயகம், பொருளாதார முன்னேற்றம் என எதுவும் இடம்பெறவில்லை. அவர் இனங்களுக்கு இடையிலான மோதல், இனவழிப்பு,படுகொலை, பொருளாதார வீழ்ச்சி, வறுமை அந்நிய ஆதிக்கம் என்பவற்றையே இலங்கை மக்களுக்கு பரிசளித்திருக்கிறார் என்பது தான் யதார்த்தமானது.
கோவணம் கட்டி ஏர் பிடித்து உழுது வெள்ளையாக தன்னைக் காட்டி அரசியலுக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தமிழ் மக்களையும் சிங்கள இன ஜேவிபி யினரையும் கொன்றொழித்தது. இப்படி கோவணம் கட்டிவந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் பின்னே இவ்வளவு கொடூரங்கள் மலிந்து கிடக்கிறன. இன்று இலங்கை அந்நிய நாடுகளின் காலடியில் அடிமைப்பட்டுக்கிடக்க ஜே.ஆர் . வாய்க்கால் வெட்டிவிட்டார்.
தனது சகோதர இனத்துக்கு சம உரிமையை வழங்கி அபிவிருத்ததியை முன்னெடுத்து இலங்கையை வளம் மிக்க அழகிய தீவாக வைத்திருப்பதற்கு மாறாக தனது சகோதர இனத்திற்கு உரிமைகளை வழங்க மறுத்து அடக்கி, ஒடுக்கி இனப்படுகொலை செய்வதற்கு அந்நிய இராணுவங்கள் அழைத்தும், படை உதவிகளையும், கடன்களையும் பெற்று இன்று இலங்கைத்தீவு அந்நிய நாடுகளின் காலடியில் அடகு வைக்கப்பட்டிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் தோற்கடித்த வெற்றி வாதம் பேசினாலும் இறுதியிலும் இறுதியாக இலங்கையின் துறைமுகங்களையும், கனிய வளங்களையும், நிலப்பரப்புகளையும், இறைமையையும் அந்நிய நாடுகளுக்கு விற்று, அடகு வைத்து கையறு நிலையில் இலங்கை அரசியல் தத்தளிக்கின்றது.
ஜே .ஆர் .ஜெயவர்த்தனவின் அந்த அரசியலை இருபத்தோராம் நூற்றாண்டிலும் திரு .சுமந்திரன் பயன்படுத்துவது என்பது பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு மாணவன் மீண்டும் பாலர் வகுப்புக்கு படியிறங்கி கல்வி கற்பதற்கு ஒப்பானது.
மேற்படி சிங்கள அரசியலின் இத்தகைய சீரழிந்த ஆரம்ப தோற்றுவாயை இன்று தமிழ் அரசியல் தலைவர்கள் கையில் எடுத்திருப்பது தமிழ்மக்களின் அழிவுக்கான ஆரம்பத்தை இவர்களும் ஆரம்பித்து விட்டார்கள் என்ற அபாயச் சங்கிலியை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பட்டங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் மீண்டும் தமிழினத்தை அடகு வைத்து அழித்தொழிக்கும் தன் இன உண்ணி தலைமைகள் மீண்டும் தலையெடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தமிழ் மக்களின் கழுத்தின் மீது தன்னின உண்ணி கொடுவாள் தொங்குவதை இனங்கண்டு தம்மைத் தற்காத்துக்கொள்ளும் படி வரலாறு தமிழ் இனத்துக்கு கட்டளையிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.