11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

இதுவல்ல இறுதி,

 பத்து மணி நேரம் இருளில் விட்டதற்கே வீதியில் இறங்கிவிட்டீர்கள். அன்று எம்மைக் காரிருளில் தள்ளிக் கொன்றழித்துக்கொண்டிருந்தபோதும் இதேபோலவே வீதியில் இறங்கி ஆர்ப்பரித்து அதனைக் கொண்டாடி மகிழ்ந்தீர்கள். 

இதுவல்ல இறுதி, இன்னமும் இருக்கிறது உங்களுக்கு. இப்போதுதானே சீனியும் மாவும் இருநூறைக் கடந்திருக்கிறது. நாங்கள் அன்றே அதனை இரண்டாயிரத்துக்கு வாங்கியவர்கள். 

மருந்தினைத் தடுத்தே அன்று பலரை மரணிக்கச் செய்தார்கள் உங்கள் மனிதாபிமான யுத்தவீரர்கள். இன்று சத்திரசிகிச்சைக்கே மருந்தில்லாமல் யாரிடமெல்லாமோ கையேந்தித் திரிகிறீர்கள்.

 இன்றைய நெருக்கடி எனக்கும்தான், என் பிள்ளைக்கும்தான். ஆனாலும் உங்களுடன் வீதிக்கு இறங்கமாட்டேன். நீங்கள் இப்போது அனுபவிக்கும் எதுவும் எனக்குப் புதிதல்ல. எம்மை ஓர் மூலையில் தள்ளி உலகத் தொடர்பைத் துண்டித்து யாருமற்ற அநாதைகளாக்கிக் கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தக்கூத்தாடி அதற்கு ஆதரவளித்த உங்களுடன் நான் ஏன் கைகோர்க்க வேண்டும்? 

செய்த வினைக்குப் பலன் அனுபவிப்பதற்கு உங்களுக்கு இன்னமும் நிறைய இருக்கிறது. எல்லாம் இருந்தபோது இனவெறிக்கு ஆதரவளித்த உங்களுக்கு பசியெடுக்கும்போது இனவாதம் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. 

எங்கள் பச்சிளம் பாலகர்களின் நெஞ்சினைத் துளையிட்ட உங்கள் வீரர்களின் துப்பாக்கி நாளையோ மறுதினமோ உங்களை நோக்கித் திரும்பும். இன்று கண்ணீர்ப்புகையைக்கண்ட நீங்கள் நாளை அதனையும் நெஞ்சில் ஏந்திப் போராடத் தயாராகுங்கள். 

இலட்சக்கணக்கான எம்மவர்களின் உயிர்த்தியாகம் வீணாகிவிட்டதே என்று கலக்கமுற்றிருந்தேன். நெஞ்சு பற்றியெரிய சொல்கிறேன், அவர்களின் சாபம் உங்களைத் தெருவெங்கும் அலைக்கழித்தே தீரும். எம்மை முட்கம்பி வேலிக்குள் அடைத்துவைத்து அழகுபார்த்த உங்கள்மீது நான் வீட்டிலிருந்து இரக்கமுற்று வருந்துகிறேன்.

கைகளை கூப்பி யாரை வணங்கியும் வேலை இல்லை. செய்த கர்ம வினை அனுபவித்தே செல்ல வேண்டும் இதுவே வினைப்பயன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.