11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 18 ஆகஸ்ட், 2021

ரெலோ இயக்கத்தின் தாஸ் படுகொலை தமிழின கொலை.

 

ரெலோ இயக்கத்தின் இராணுவப் பொறுபாபளராக இருந்தவர் தாஸ். சிறீசபாரெத்தினத்தின் விசுவாசியாக இருந்த ‘பொபி’ இராணுவப் பொறுப்பை கைப்பற்ற விரும்பினார் ‘பொபி’ . தாஸ் செல்வாக்குப் பெறுவதையும், தன்னையாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் வளர்ந்து வருவதையும் சிறியும் விரும்பவில்லை. தாஸ் வடமராட்சியைச் சேர்ந்தவர். சிறீசபாரெத்தினம் கல்வியங்காட்டை சேர்ந்தவர். வடமராட்சியில் தாசுக்கு தனிச் செல்வாக்கு இருந்தது. வடமராட்சியில் புலிகள் இயக்கத்தினருக்கும் தாஸ் சவாலாக விளங்கினார். 

 தாஸ் குழுவினர் வீதிகளில் எதிர்ப்படும் புலிகள் இயக்க உறுப்பினர்களை பந்தாடிக்கொண்டு திரிந்தார்.வீதிகளில் இறங்கினால் பிரச்சனை வரும் என்று தமது உறுப்பினர்கள் அனைவரையும் முகாம்களுக்குள் இருக்குமாறு கிட்டு சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது.

பின்னர் தாசுடன் புலிகள் இயக்கத்தினர் பேச்சு நடத்தியதால் பிரச்சனை தீர்ந்தது.புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை மூலம் தாஸின் செல்வாக்கு ரெலோவுக்குள் மேலும் வளர்ந்தது. இவற்றையெல்லாம் சிறீசபாரெத்தினம் அவ்வளவாக ரசிக்கவில்லை.தாசுக்கும், பொபிக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றார் சிறிசபாரெத்தினம்.

பொபிக்கு சார்பாகவே சிறீசபாரெத்தினம் பிரச்சனையைத் தீர்க்க முற்பட்டதால் தாஸ் சமரசத்திற்கு உடன்படவில்லை. தாஸ் இருக்கும் வரை பிரச்சனை தீராது என்ற முடிவுக்கு வந்தார் சிறீசபாரெத்தினம்.நேரடியாக மோதினால் தாசின் பலத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கும். வடமராட்சியில் தாசுக்கு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருப்பதால், தாசை தேடிச் சென்று மோதலில் ஈடுபடுவதும் முடியாத காரியம். இதனால் சதித்திட்டம் தீட்டப்பட்டது. தாசை தீர்த்துக்கட்டுமாறு பொபிக்கு உத்தரவிட்டார் சிறீசபாரெத்தினம். தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது ‘பொபி’ குழு.

சதித்திட்டத்தின் ஒரு ஏற்பாடாக தாசுக்கு தூது அனுப்பப்பட்டது. தாசும், பொபியும் ஒரு பொது இடத்தில் சந்தித்துக் பேசிக் கொள்ளலாம். யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைதான் சந்திப்புக்கு ஏற்ற இடமாக சொல்லப்பட்டது. பொது மருத்துவ மனைக்குள் இயக்கத்தினர் எவரும் ஆயுதங்களோடு  செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. சகல இயக்கங்களும் அந்தப் பொதுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வந்தனர்.

யாழ்-பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் தாஸ். ஆயுதங்களை வாகனத்தில் வைத்துவிட்டு தாசும், நாலு பேரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.மருத்துவமனையில் தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக்கொண்டு பொபி குழுவினரின் வருகைக்காக காத்திருந்தனர்.  திடீரென்று மருத்துவ மனையின் வாயில் பக்கம் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின.தாஸ் குழுவினருக்கும் இந்தச் சத்தங்கள் கேட்டன. கையிலே ஆயுதமும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு இடையில், தேநீர் விடுதிக்குள் புகுந்துவிட்டது பொபி குழு.

கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு. தாஸ் சூடுபட்டு விழுந்தார். தொடர்ந்து தாசுடன் வந்தவர்களை நோக்கி சுட்டுத் தள்ளினார்கள் தாசின் வலது கரமாக இருந்த காளி, அண்ணாச்சி என்றழைக்கப் படும்   பீற்றர், மற்றும் நிசான், மோகன் ஆகியோர் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வேலணை ஆரம்பநீதிமன்ற நீதிபதி கிருபரத்தினம். ரெலோ குழுவினரின் கண்மூடித்தனமான சூடு அவர்மீதும் விழுந்தது. அந்த இடத்திலேயே பலியானார் நீதிபதி.மருத்துவ தாதியொரு வரையும்  துப்பாக்கிக் குண்டு பதம்பார்த்தது. அவரும் பலியானார். சிகிச்சைக்காக வந்திருந்த மற்றொரு பொது மகனும் கொல்லப்பட்டார்.  பத்துப்பேர் வரை காயமடைந்தனர். தாசின் உடலை தூக்கிக் கொண்டு வெளியேறியது பொபி குழு.

ரெலோவின் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் உட்பட, வடக்கில் நடைபெற்ற ரெலோவின் சொல்லிக் கொள்ளக்கூடிய தாக்குதல்கள் அனைத்திலும் முன்னணியில் நின்றவர் தாஸ். தாஸ் பொல்லப்பட்ட பின்னர் ரெலோ இயக்கம் வெற்றிகரமான தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை. அது ஒன்றே போதும் தாசின் திறமைக்கு தக்க சான்றுசொல்ல. தாஸ் கொல்லப்பட்ட செய்தியறிந்து  வடமராட்சியெங்கும் மக்கள் தாமாகவே முன்வந்து கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டார்கள்.

13.1.86 அன்று உடுப்பிட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லொறிகளில் கிளம்பினார்கள்.யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, கல்வியங்காட்டில் உள்ள ரெலோ முகாமுக்கு செல்வது. தாசின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருவது என்பதுதான் ஏற்பாடு.சிறீசபாரெத்தினம் அப்போது கல்வியங்காட்டில்தான் தங்கியிருந்தார்.ஊர்வலத்தை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார் சிறீசபாரெத்தினம். தோட்டுத்தில்லை தலைமையில் ஒரு குழு ஆயுதங்களோடு சென்றது.முத்திரைச் சந்தியில் உள்ள மின்சார டரான்ஸ்போமருக்கு பின்புறமாக மறைந்திருந்து ஊர்வலத்தினர் மீது சுடத் தொடங்கினார்கள் அச்சுவேலியைச் சேர்ந்த உதயபாதம் என்னும் இளைஞர் சூடுபட்டு விழுந்தார். அடுத்த சூடு செல்வராணி என்னும் பெண் மீது விழுந்தது. இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

தோட்டுத் தில்லையை நோக்கி ஊர்வலத்தில் இருந்த இளைஞர்கள் ஓடிச்செல்ல, துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே தலைதெறிக்க ஓடித்தப்பினார்கள்.ஊர்வலமாக வந்த மக்கள்மீது ஒளித்திருந்து துப்பாக்கி பிரயோகம் செய்து இருவர் பலியாகக் காரணமாக இருந்த முதல் இயக்கம் ரெலோதான்.முத்திரைச் சந்திக்கு சமீபமாக நல்லூரில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் இருந்தது.துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு டக்ளஸ் தேவானந்தா சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்தார்.

 ஊர்வலத்தில் பலியானவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட இருந்தன.உடல்களை தம்மிடம் ஒப்படைக்க செய்யுமாறும், இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு பாதுகாப்பு தறுமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊர்வலத்தினர் கேட்டனர்.இதற்கிடையே கவிஞர் சேரன் உட்பட யாழ் பல்கலைக்கழக் மாணவர்கள் வந்து, ரெலோவின் அராஜக நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், இறுதிச் சடங்கை பெரியளவில் செய்யவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டனர் ஊர்வலத்தில் பலியான இருவரது உடல்களையும் யாழ் பல்கலைக் கழகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வாங்கினார் டக்ளஸ் தேவானந்தா.ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்கள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் முன்னணியில் நின்றனர்.இதற்கிடையே யாழ், பல்கலைக் கழகத்தில் சகல இயக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.ரெலோ சார்பாக மோகன் கலந்து கொண்டார். இவர் புலிகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவ (ரெலோ) இயக்கத் தலைவர் ஒபரோய் தேவனின் தம்பி.முத்தரைச் சந்தியில் நடைபெற்ற சம்பவத்திற்கு துளியும் கவலைப்படாமல் விளக்கம் சொன்னார் மோகன். “ஊர்வலத்தில் இருந்து வெடிகுண்டு (கிரனைட்) ஒன்று உருண்டு வந்தது நல்லகாலம் வெடிக்கவில்லை. ஆனால் வெடிக்கப்போகிறது, வெடிகுண்டு வீசப்படுகிறது என்ற பதட்டத்தில் எமது உறுப்பினர்கள் சுட்டுவிட்டார்கள்.”

அத்தோடு நிறுத்தவில்லை ரெலோ இயக்கப் பிரதிநிதி. இன்னொன்றையும் சொன்னார்:“எமது உறுப்பினர்கள் சுட்டது உண்மை. ஆனால் அவர்கள் சுட்டதால் தான் அந்த இரண்டு பேரும் செத்தார்களா என்பது தெரியவில்லை. ஊர்வலத்திற்குள் இருந்து யாராவது சுட்டு தவறுதலாக பட்டதோ என்றும் பார்க்க வேண்டும்.”அதன் பின்னர் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்பதால் கூட்டம் முடிவடைந்தது.

ரெலோ நேரடியாக வெளியிட்ட பிரசுரத்தில் தாஸ் மீதான கொலை நடவடிக்கைக்கு கூறப்பட்ட காரணங்களில் ஒன்று இது:“இயக்கத் தலைமைக்குத் தெரியாமல் கூட்டணித் தலைவர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆயியோரை படுகொலை செய்தார் தாஸ்.”அதுவரை புலிகள்தான் அந்தக் கொலைகளுக்கு காரணம் என்று சொல்லி வந்தது ரெலோதமது உட்பிரச்சனை காரணமாக முதன் முதலாக உண்மையை ஒப்புக் கொண்டது ரெலோ.

 ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரது கொலைகள் தாஸ் தலைமையில் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கான உத்தரவை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பியவர் சிறிசபாரெத்தினம்தான்.

யாழ்-பல்கலைக்கழகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பலியான இருவருக்கும் அஞ்சலி தெரிவித்தனர்.ஐயாயிரம் பேர்வரை கலந்து கொள்ள இறுதி ஊர்வலம் மௌனமாக நடைபெற்றது.இறுதி ஊர்வலம் ஆரம்பமான யாழ் பல்கலைக்கழக வாயிலுக்கு சமீபமாக ஒரு பத்துப் பேர் சுலோக அட்டைகளுடன் நின்றனர். “கொள்ளைக்காரன் தாஸ் கொல்லப்பட்டது நியாயம்” என்றன சுலோக அட்டை வாசகங்கள். சுலோக அட்டையோடு நின்றவர்கள் ரெலோ உறுப்பினர்கள்.

பிரமாண்டமான இறுதி ஊர்வலம் முன்பாக ரெலோவின் அந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்தது.அதேவேளை தாசின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ரெலோ ஒப்படைக்கவேயில்லை.ரெலோ இயக்கத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருந்த தாஸ், அதே இயக்கத்தால் ஒரு அநாதைப் பிணமாக, கொள்ளைக்காரன் என்ற பட்டத்தோடு எங்கோ ஒரு வெளியில் எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குழி வெட்டி புதைக்கப்பட்டிருக்கலாம். ரெலோ இயக்கத்தின் படுகொலைகள் அனைத்தும் தமிழின அழிப்பு. 11.03.1986.


           





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.