ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர். ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ் முகாமுக்கு மைக்கேல் தான் பொறுப்பாக இருந்தார். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் அந்த முகாமில் வைக்கப்பட்டுத்தான் தளத்திற்கு அனுப்பப்படுவதுண்டு. தங்கச்சிமடத்தில் ஈரோஸ் முகாமுக்கு அருகில்தான் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்றும் இருந்தது. மைக்கேலின் பிரச்சனை புலிகளுக்கும் தெரியும். உள் பிரச்சனையால் விரக்தி நிலையில் இருந்த மைக்கேல் சக இயக்கங்களுக்கும் ஈரோஸ் உள்பிரச்சனை தொடர்பாக கூறியிருந்தார்.
மைக்கேலின் போக்கு ஈரோஸ் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவரை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இயக்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிக்குமாறு மைக்கேலுக்கு கூறப்பட்டது. தங்கச்சிமடத்துக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே இருங்கள் என்று மைக்கேலுக்கு கூறிவிட்டார் சங்கர்ராஜு. தன்னை வெட்டிவிடப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார் மைக்கேல். ‘தன்னை கட்டுப்படுத்தும் தகுதி சென்னையில் உள்ளவர்களுக்கு கிடையாது. தளத்தில் உள்ள தோழர்கள் தனது பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று கூறினார் மைக்கேல். சென்னையில் உள்ள ஏனைய இயக்க தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை கூறினார்.
சென்னையில் இருந்து புறப்பட்டு நேராக தங்கச்சிமடத்துக்குச் சென்றார் மைக்கேல். தங்கச்சிமடம் முகாமில் இருந்தவர்கள் பலர் மைக்கேலுக்கு விசுவாசமானவர்கள். அக்காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் தங்கச்சிமடம் முகாமில்தான் வைக்கப்பட்டிருந்தன. முன்பு வழங்கப்பட்ட ஆயுதங்களை விட புதியரக ஆயுதங்களையும் அக்கட்டத்தில்தான் இந்திய அரசு கொடுத்திருந்தது. மோட்டார்கள், 90 கலிபர் துப்பாக்கிகள் 2 உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கு இருந்தன.
மைக்கேல் ஆயுதங்களை கணக்கிட்டுப்பார்த்தார். தனியாக ஒரு இயக்கம் நடத்துவதானால் கூட தாராளமாகப் போதும். சகல ஆயுதங்களையும் படகொன்றில் ஏற்றினார். நம்பகரமான சிலருடன் புறப்பட்டார். ஈரோஸ் உறுப்பினரும், படகோட்டியுனமான மன்னாரைச் சேர்ந்த வீராதான் படகை செலுத்தினார். படகு புறப்பட்டு கடலில் சென்று கொண்டிருந்தபோதுதான் தொலைத்தொடர்பு சாதனம் மூலமாக தகவல் சொன்னார் மைக்கேல்.
மைக்கேல் ஆயுதங்களுடன் புறப்பட்டுவிட்ட செய்தி சென்னையில் இந்த ஈரோஸ் தலைமைக்கு பலத்த அதிர்ச்சி. அவர்கள் தளத்தில் இருந்தவர்களுக்கு அவசரமாகச் செய்தி அனுப்பினார்கள். நேராக மன்னார் சென்று இறங்குவதுதான் மைக்கேலின் திட்டம். மன்னாரில் ஒரு தளத்தை வைத்துக்கொண்டு பின்னர் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவரது நினைப்பு.
ஆயுதங்களோடு மைக்கேல் புறப்பட்ட போதே தங்கச்சிமடத்தில் இருந்த புலிகளுக்கு அது தெரிந்துவிட்டது. மைக்கேல் சென்ற படகு நடுக்கடலில் வைத்து புலிகளின் படகொன்றால் வழிமறிக்கப்பட்டது. படகில் இருந்தவர்கள்மீது சரமாரியாகச் சுட்டனர் புலிகள். மைக்கேல், வீரா உட்பட படகில் இருந்தவர்கள் அனைவரும் பலியானார்கள். அவர்கள் படகில் இருந்த ஆயுதங்களை தமது படகில் ஏற்றினார்கள் புலிகள். ஆயுதங்கள் அனைத்தும் ஏற்றப்பட்டதும் மைக்கேல் குழுவினரின் படகு தகர்க்கப்பட்டது. நடுக்கடலில் படகு எரிந்துகொண்டிருந்தது.
தங்கச்சிமடத்தில் இருந்து புறப்பட்ட மைக்கேல் குழுவினர் எங்கே போய் இறங்கினார்கள்? என்ன செய்கிறார்கள்? என்று அறிய முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தது ஈரோஸ் தலைமை. சில நாட்களின் பின்னர்தான் விஷயம் மெல்லக் கசிந்து, நடுக்கடலில் விபரீதம் தெரியவந்தது. புலிகளுடன் முரண்படுவதை விரும்பாததால் கடலில் நடந்த சம்பவம் பற்றி ஈரோஸ் வெளியே சொல்லவில்லை. ஈரோசுக்குள் மைக்கேல் பிரச்சனைபட்டது வெளியே தெரியும் என்பதால், மைக்கேலைக் காணவில்லை என்றதும் ஈரோஸ்மீதுதான் ஏனைய இயக்கங்கள் சந்தேகப்பட்டன. ஈரோசுக்குள் நடந்த உட்கொலை என்று அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டனர். மைக்கேல் சுறு சுறுப்பான ஒரு போராளி. நாவாந்துறையில் இருந்து பலரை ஈரோசில் இணைத்தார். அரசியல் வகுப்புக்கள் நடத்தி ஈரோசிற்கு உறுப்பினர் திரட்டலில் தீவிரமாக செயற்பட்டவர்களில் முன்னணியில் இருந்தவர் மைக்கேல். என்ன நடந்தது, எப்படி மறைந்தார் என்றே மக்களுக்குத் தெரியாமல் அவரது மரணம் நிகழ்ந்ததுதான் மாபெரும் சோகம்.
tamil-pettagam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.